டில்லி,

ரட்டை இலை தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனுக்கு உதவியதாக மேலும் 15 பேருக்கு டில்லி போலீசார் சம்மன் கொடுத்திருந்தனர்.

அவர்கள் இன்று டில்லி போலீசாரின் விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடைபெற்றபிறகு அவர்களும் கைது  செய்யப்படலாம் என தெரிகிறது.

 

இரட்டை இலை சின்னத்தை தனக்கு அணிக்கு ஒதுக்கக்கோரி தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட புரோக்கர் சகேஷ் சந்திரா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்,  அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.  அவருடன் அவரது நண்பர் மல்லிகார் ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.

அவர்களை சென்னை அழைத்து வந்த டில்லி போலீசார், சென்னையில் பலரின் வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களை இன்று (மே 2ந்தேதி) டில்லி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கினர்.

இந்த விவகாரத்தில் பணம் கைமாறியது தொடர்பாக ஹவாலா புரோகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்  ஆதம்பாக்கம்  திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை  அதிகாரியான மன்னார்குடியை சேர்ந்த  மோகனரங்கம்,  மேலும் கொளப்பாக்கம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி டேனியல்,  திருவேற்காட்டைச் சேர்ந்த வக்கீல் கோபிநாத் என்பவர் உள்பட 15 பேரிடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டு சம்மன் வழங்கப்பட்டது.

இந்த 15 பேரும் இன்று டில்லி சென்று விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இவர்களிடம் ஹவாலா பண பரிமாற்றம் குறித்து, டிடிவி தினகரக்கும்  இவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் டில்லி வட்டார தகவல்கள் உலா வருகிறது.