டில்லி:

ரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது டில்லி காவல்துறை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவு பட்டது. இதன் காரணமாக இரட்டைஇலையை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்தது.

இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு பெற அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், டில்லி புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மூலம், தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் சுகேஷ்சந்திரசேகர் வாக்குமூலத்தின் அடிப்படையில், டிடிவி தினகரனை டில்லி போலீசார் கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.

இதற்கிடையில், இரட்டை இலை லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டில்லி போலீசார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து டி.டி.வி. தினகரன் மீது டில்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் புதிய பிரிவு ஒன்று கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 (மதிப்புமிக்க பாதுகாப்பு ஏற்பாட்டில் போலியை உருவாக்கு தல்) சேர்க்கப்பட்டுள்ளது.

தினகரன் வழக்கில் இந்த புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி நீதிபதிகள், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை கொடுக்க முடியும்.

அது மட்டுமின்றி இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்ய போதுமான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்வது குறிப்பிடத்தக்கது.

இடைத்தரகர் சுகேசிடம் இருந்து போலி பாராளுமன்ற அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த பிரிவு டிடிவி தினகரன் வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.