டிடிவிக்கு ஜாமீன் கிடைக்குமா? மேலும் ஒரு ஹவாலா புரோக்கர் கைது!

--

டில்லி,

ரட்டைஇலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் மேலும் ஒரு ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக டிடிவிக்கு இன்று ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்க கோரி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக டிடிவி தினகரன் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற தாக கூறப்பட்ட புகார் காரணமாக, டில்லி குற்றப்பிரிவு போலீசாரின்  4 நாட்கள் விசாரணைக்கு பிறகு தினகரன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், லஞ்ச பணம் பரிமாற்றம் தொடர்பாக பிரபல ஹவாலா புரோக்கர் நரேஷ் ஏற்கனவே டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தரகர் சுகேஷ் சந்திரா முதலில் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் நடைபெற்ற விசாரணையில்,  இரட்டை இலையை அதிமுக அம்மா அணிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசியதாக தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையையடுத்து, இதில் முதல் கட்டமாக ரூ.10 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. அந்த 10 கோடி ரூபாய் பணத்தை   சென்னை யிலிருந்து கொச்சி வழியாக டில்லிக்கு ஹவாலா தரகர் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதில் தரகராக ஹவாலா புரோக்கர்கள் செயல்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக கொச்சியை சேர்ந்த  நரேஷ் என்ற ஹவாலா புரோக்கர்  தாய்லாந்தில் இருந்து டில்லி வரும்போது கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து இன்று  ஹவாலா ஏஜென்ட் பாபு பாரத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று டிடிவி தினகரனின் ஜாமின் மனு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், தற்போது மற்றொரு ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.

இதன் காரணமாக டிடிவி தினகரன் மீதான புகார் மேலும் வலுவடைந்துள்ளது.அவரது ஜாமினும் கேள்விக்குறியாகி உள்ளது.