டில்லி,

ரட்டை இலை சின்னம் பெற, டில்லி தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் இன்று  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் கமிஷன் இரட்டை இலையை முடக்கியது. அதை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க  கூறப்பட்ட புகார் காரணமாக  தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து அதே மாதம் 25 ம் தேதி டிடிவி தினகரனை டில்லி காவல்துறை கைது செய்து திகார் சிறை யில் அடைத்தது. அவர் ஜூன் 1 ம் தேதி ஜாமீனில் வெளி வந்தார்.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் டில்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டிடிவி பெயர் இடம் பெறவில்லை.

தற்போது ஜாமினில் இருக்கும்  டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்குகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கு டில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீஸார் கூடுதல் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்கின்றனர்.

இந்த குற்றப்பத்திரிகையில், டிடிவி தினகரன், அவரது  நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.