இரட்டை இலை 5வது கட்ட விசாரணை இன்று! தீர்ப்பு எப்போது?

டில்லி,

முடக்கப்பட்ட இரட்டை இலையை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்த  5வது கட்ட விசாரணை இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது.

இதையொட்டி அதிமுக அணிகளின் தலைவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே 4 கட்ட விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் இன்று 5வது கட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதன்பிறகாவது தேர்தல் கமிஷன் தனது தீர்ப்பை வழங்குமா அல்லது விசாரணையை மீண்டும் ஒத்தி வைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்று முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை அக்.1ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் அணி,  சசிகலா அணி என அதிமுக பிளவு பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கேட்டதால் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதைத்தொடர்ந்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகள் இணைந்த பின் இரட்டை இலை சின்னத்தை, தங்கள் அணிக்கு தர வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பான பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில்  டிடிவி தினகரன் அணியினரும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில்   தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட விசாரணை கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட விசாரணை கடந்த 13-ம் தேதியும் , மூன்றாம் கட்ட விசாரணை கடந்த  23-ம் தேதியும்  நடைபெற்றுள்ளது.  4வது கட்ட விசாரணை கடந்த கடந்த அக்டோபர் 30ந்தேதி நடைபெற்றது.

விசாரணையின் போது, ஓபி.எஸ். – எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பில் விளக்கங்களை அளித்து வாதாடினார்கள். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணை மாலை 6 மணிவரை நீடித்தது.

அதையடுத்து விசாரணையை இன்று (நவ-1) ஒ ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அதன்பிறகாவது தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பை வழங்குமா அல்லது மீண்டும் விசாரணையை ஒத்தி வைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்த வழக்கு ஒன்றில் நவ.10ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.