டில்லி,

திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இன்று காலை முதலே இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இடையில், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று டிடிவி தரப்பினர் கேள்வி எழுப்பினர்.

இதன் காரணமாக இரட்டை இலை குறித்து மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடியும் முதலில் இரட்டை இலை ஒதுக்கியதை மகிழ்ச்சியாக அறிவித்தார். பின்னர், செய்தியாளர்களின் கேள்வி அடிப்படையிலேயே பதில் தெரிவித்ததாக ஜகா வாங்கினார்.

இந்நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்து உள்ளது. சுமார் 83 பக்கம் அளவில் தீர்ப்பு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அதிமுகவின் கொடி, சின்னம், பெயர் அனைத்தும் ஒருங்கிணைந்த அதிமுகவான இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே கிடைத்துள்ளதால், இனிமேல் அதிமுக என்ற பெயர் அவர்களே பயன்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.‘

டிடிவி தரப்பினர் அதிமுக பெயர் மற்றும் கொடி, சின்னங்களை பயன்படுத்த முடியாது.

தற்போது தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு காரணமாக  சற்று தடைபட்ட அதிமுகவினரின் கொண்டாட்டங்கள் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.