டில்லி,

பிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்தை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு அணிகள் இணைப்பு குறித்த கடிதம் மற்றும் ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் அளிக்க தமிழக அமைச்சர்கள் குழு டில்லி சென்றது. அவர்கள்  இன்று காலை தேர்தல் கமிஷனுக்கு சென்று ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

கடந்த 12-ம் தேதி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது, அவர்களின் மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறவிப்புகள், இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், கட்சியின் சட்ட விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார், சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோர்  இன்று அதிகாலை டில்லி சென்றனர்.

அதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் அலுவலகம் வந்த அவர்கள், பொதுக்குழு சம்பந்தமான ஆவனங்களை தாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கே.பி.முனுசாமி கூறியதாவது,  இரு அணிகள் இணைப்பு குறித்த கடிதம் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர் நியப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் ஒருங்கிணைப்பாளர் நியமனம் தொடர்பான புதிய அமைப்பு விதி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.