சான்ஃபிரான்சிஸ்கோ: தவறான தகவல்கள் மற்றும் புரளிகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய 5000 கணக்குகளை நீக்கியுள்ளது டிவிட்டர் நிர்வாகம்.

அந்த அனைத்து கணக்குகளும் ஈரானில் துவங்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளது மைக்ரோ – பிளாக்கிங் சைட்.

“பொது உரையாடலின் கண்ணியத்தை காக்கும் பொறுப்பை டிவிட்டர் கொண்டுள்ளது. வெளிநாட்டு அல்லது அரசு ஆதரவு பெற்ற உள்நாட்டு அமைப்புகளால், தேர்தல் மற்றும் அரசியல் உரையாடல்களில் செல்வாக்கு செலுத்தும் நோக்கில், டிவிட்டரை முறைகேடாகப் பயன்படுத்தும் தகவல்களை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவதன் மூலமே இதை மேற்கொள்ள முடியும்” என்று டிவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 4,779 பக்கங்களை நீக்கியுள்ளதுடன், 1,666 கணக்குகளையும் முடக்கியுள்ளது டிவிட்டர். இவை அனைத்துமே ஈரான் நாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இவை ஒட்டுமொத்தமாக 2 மில்லியன் தடவைகள் டிவீட் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.