7 கோடி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்

சான்ஃபிரான்சிஸ்கோ

டிவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் மற்றும் வன்முறை தூண்டல்கள் போன்றவைகளில் ஈடுபட்ட 7 கோடி கணக்குகளை நீக்கி உள்ளது.

இன்றைய நிலையில் உலக அளவில் முகநூல் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முன்னணியில் உள்ளன.   இந்த தளங்களை கோடிக்கணக்கான மக்கள் உபயோகப் படுத்தி வருகின்றனர்.   உலக அளவில் முகநூலை சாதாரண நிலை மற்றும் புகழ் பெற்றவர்களும் பயன் படுத்துகின்றனர்.   அதே நேரத்தில் அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் டிவிட்டரை உபயோகிக்கிறனர்.

தற்போது சமூக வலைத் தளங்களில் வதந்திகள் அதிகம் பரப்பப் படுகின்றன.  அதை அடிப்படையாகக் கொண்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.   பெரும்பாலும் இது போன்ற போலி தகவல்கள் பரப்புவது போலி கணக்குகளே ஆகும்.    இதனால் டிவிட்டர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் பாதிக்கப்படுகின்றன.

டிவிட்டர் நிறுவனம் தனது கணக்குகளில் உள்ள போலி பயன்பாட்டாளர்களை கண்டறிந்து நீக்கி வருகிறது.    கடந்த ஒரு வருடத்தில் டிவிட்டர் நிறுவனம் சுமார் 7 கோடி கணக்குகளை நீக்கி உள்ளது.  இந்த தகவலை சர்வதேச ஊடகத்தில் ஒன்றான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.