டில்லி:

த்திய அமைச்சர் மேனகா காந்திக்கு ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் பிரபல எழுத்தாளர் ஷோபா டே தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா ‘டிவி’ சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டீன் ஏஜில்  ஹார்மோன் மாற்றம் ஏற்படுவதால் அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று தெரிவித்திருந்தார்.  மேலும், “16 – 17 வயது ஆகும் போது, ஹார்மோன்கள் செயல்பாட்டால், இனக்கிளர்ச்சி ஏற்பட்டு, மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அதில் இருந்து பாதுகாக்க, ஹாஸ்டலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்” என்றார்.

அவரது கருத்துக்கு, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல எழுத்தாளர் ஷோபா டே, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேனகாவுக்கு, ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. பெண்கள் மீது கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று தானே அவர் சொன்னார். இனிய சர்வதேச பெண்கள் தின வாழ்த்துகள்’ என்று கடுமையாக, விமர்சனம் செய்துள்ளார்.

அபூர்வா விஸ்வநாத் என்பவர், டுவிட்டரில், ‘எனக்கு கூட, இன்று ஹார்மோன் பாதிப்புஏற்பட்டது; என்ன செய்வது என, தெரியவில்லை. இதற்கு, மேனகா, தக்க கட்டுப்பாட்டு விதியை சொல்ல வேண்டும்’ என, கிண்டல் செய்துள்ளார்
இது தொடர்பாக, பிறகு  விளக்கம் அளித்திருந்த மேனகா, ”ஹார்மோன் மாற்றம் என்பதை நான் பாலியல் ரீதியில் அர்த்தப்படுத்தவில்லை.  ஹாஸ்டலில் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் எனக் கூறியது, ஒழுக்கம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே,” என்று விளக்கம் அளித்துள்ளார்.