சுஷ்மா ஸ்வராஜை அடித்து உதைக்க அவர் கணவருக்கு வேண்டுகோள் விடுத்த டிவிட்டர் பதிவர்

.டில்லி

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்லாமியர்களுக்கு பரிவு காட்டுவதால் அவரை அவர் கணவர் அடித்து உதைக்க வேண்டும் என ஒருவர் டிவிட்டரில் பதித்துள்ளார்.

கணவருடன் சுஷ்மா ஸ்வராஜ்

சமீபத்தில் ஒரு இந்துப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட இஸ்லாமியக் கணவரை ஒரு பாஸ்போர்ட் அதிகாரி கடுமையாக திட்டி உள்ளார்.   அத்துடன் அவர் அந்தக் கணவரை மதம் மாற வேண்டும் எனவும் சொல்லி உள்ளார்.   இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அந்த இஸ்லாமிய இளைஞர் புகார் அளித்தார்.   அமைச்சர் உத்தரவின் பேரில் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.   அத்துடன் அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

அது முதலே சுஷ்மாவுக்கு எதிராக டிவிட்டரில் பதிவுகள் பதியப்படுகின்றன.   இடமார்றம் செய்யப்பட்ட அதிகாரிக்கு ஆதரவாக அந்தப் பதிவுகள் உள்ளன.   இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கௌஷல் தமக்கு வந்துள்ள டிவிட்டர் பதிவு  ஒன்றை மறுபதிவு செய்துள்ளார்.

மகேஷ் குப்தா என்பவர் அந்தப் பதிவில், ”உங்கள் மனைவி இன்று வீட்டுக்கு வந்த உடன் அவரை நன்கு அடித்து உதைத்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம் என பாடம் புகட்டுங்கள்.   மற்றும் இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை அவருக்கு சொல்லுங்கள்” என பதிந்துள்ளார்.

ஏற்கனவே தன்னை  தாக்கி வந்த டிவிட்டர் பகுதிகளை வெளியிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ் இது போல பதிவு செய்வதை அனுமதிக்கலாமா என கருத்துக் கேட்டுள்ளார்.

இந்த பாஸ்போர்ட் விவகாரத்தில் சுஷ்மாவின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி பாராட்டுப் பதிவு ஒன்றை டிவிட்டரில் இட்டுள்ளார்.  அதில் அவர், “வெளிநாட்டில் வாழும் நம் நாட்டவர்கள் நம்மிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கின்றனர்.   அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நடந்தமைக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.” என பதிந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

You may have missed