வாஷிங்டன்

ந்திய உணவு வகைகளை பயங்கரமானவை என டிவிட்டரில் விமர்சித்த அமெரிக்கக் கல்வியாளருக்கு  கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உலகெங்கும் இந்திய உணவு வகைகளுக்குப் பல ரசிகர்கள் உள்ளனர்.   இந்திய உணவு வகைகள் சற்று காரசாரமாக, மசாலாக்கள் நிறைந்து ஒரு வகை மணத்துடன் தயாரிக்கப்படுவதால் பல வெளிநாட்டினர் இந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.    உலகின் பல நாடுகளில் உள்ள இந்திய உணவகங்களில் இந்தியர்களை விட வெளிநாட்டினர் அதிகம் வருவது என்பது வழக்கமான ஒன்றாகும்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான டாம் நிக்கோலஸ் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், கல்வியாளர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.   அவர் தி டெத் ஆஃப் எக்ஸ்பெர்டைஸ் என்னும் புத்தகத்தை எழுதிப் புகழ் பெற்றவர் ஆவார்.  அவருடைய டிவிட் தற்போது அவருக்கு எதிர்மறை புகழை அளித்து வருகிறது.

டாம் நிக்கோலஸ் தனது டிவிட்டரில், “இந்திய உணவு வகைகள் மிகவும் பயங்கரமானவை  மக்கள் அவற்றை விரும்புவது போல் நடிக்கின்றனர்” என பதிந்தார்.  இந்த பதிவுக்கு இந்தியர்கள் மட்டுமின்றி  ஏராளமான அமெரிக்கர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.     அவரது டிவிட்டை எதிர்த்து பலர் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.

தொலைக்காட்சி பிரபலமான பத்மா லட்சுமி, ”உங்களுக்கு நாக்கில் சுவையறியும் நரம்புகள் இல்லையா?” எனக் கேட்டுள்ளார்.  மற்றொரு எழுத்தாளரான நீல் க்ட்யால் இந்த  பதிவைக் கண்டித்துள்ளார்.  அவருடைய சமீபத்திய புத்தகமான ”இம்பீச் : தி கேஸ் அகைன்ஸ்ட் டொனால்ட் டிரம்ப்” எனப்படும் அமெரிக்க அதிபர் தகுதி நீக்கம் குறித்த புத்தகம் மிகவும் புகழ் பெற்றதாகும்.

நியூயார்க் தெற்கு மாகாண தலைமை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா, ”அடக்கடவுளே,  நான் உங்களை ஒரு நல்ல இந்திய உணவு விடுதிக்கு அழைத்துச் செல்கிறேன்  அங்கு நமது நாட்டினர் விரும்பி உண்ணும் பட்டர் சிக்கனை சாப்பிட்டால் நாட்டையே அழைத்து வருவீர்கள்” எனப் பின்னூட்டம் இட்டுள்ளார்.

இந்த பின்னூட்டங்களுக்கு அளித்த பதிலில் டாம் நிக்கோலஸ், ”நீங்கள் அனைவரும் சேர்ந்து எனது 30 வருடக் கருத்தை மாற்ற முயல்கிறீர்கள்.  நீங்கள் தெரிவித்த அனைத்தையும் நான் ஏற்கனவே சாப்பிட்டு பார்த்துள்ளேன்.  எனது மரபணுப்படி இந்திய உணவு மேல் வெறுப்பு உள்ளதாக நினைக்கிறேன்.

நீங்கள் காரசாரமான உணவு எனக் கூறுவதை உண்டால் எனக்கு நெஞ்சு எரிச்சல் மட்டுமே வருகிறது.    என்னைப் பொருத்தவரை நல்ல உணவு என்றால் எனது வாயில் புண்களை வரவழைக்காத உணவு ஆகும்.   அது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை என்பது எனக்கு இன்னும் புரியவில்லை” என தெரிவித்துள்ளார்.