டில்லி: உயிரிழந்த துப்புரவு தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் நிதி….டுவிட்டர் மூலம் குவிந்தது
டில்லி:
டில்லியில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளி குடும்பத்துக்கு டுவிட்டர் மூலம் ரூ.24 லட்சம் நிதி குவிந்தது.
மேற்கு டில்லி டாப்ரி பகுதியில் உள்ள ‘டில்லி ஜல் வாரிய’ கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் அதேபகுதியை சேர்ந்த அனில் (வயது 37) என்ற தொழிலாளி ஈடுபட்டார். எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணி செய்த அனில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தார்.
இவர் கூலி அடிப்படையில் இப்பணிக்கு வரவழைக்கப்ப்டடார். இவரது மனைவி ராணி. 3 குழந்தைகள். டாப்ரியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது 4 மாத குழந்தை நிமோனியா தாக்குதலுக்கு உள்ளான 6வது நாளில் அனில் இறந்துள்ளார்.
இந்நிலையில் அனில் உடலை பார்த்து அவரது மகன்கள் கதறி அழுத புகைப்படம் டுவிட்டரில் வெளியானது. சிவ் சன்னி என்ற பத்திரிக்கையாளர் இதை பகிர்ந்தார். இறுதி காரியத்திற்கு பணம் இன்றி குடும்பத்தினர் அவதிப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டது.
இந்த பதிவை பார்த்த பலர் அந்த குடும்பத்திற்கு உதவ முன்வந்தனர். உதய் அறக்கட்டளை முயற்சியுடன் ஆன்லைன் நிதி திரட்டும் நிறுவனமான ‘கேட்டோ’ மூலம் நிதி சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதைதொடர்ந்து அனில் வீட்டின் அருகில் இருப்பவர்கள் இறுதி காரியத்திற்கான செலவுத் தொகை ஏற்றுக் கொண்டனர். மேலும், அவரது குடும்பத்துக்கு நிதி திரட்டும் பணி தொடர்ந்தது. 24 மணி நேரத்தில் ரூ.24 லட்சம் சேகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.