நாக்பூர்:

விமானத்தில் பணிப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 25ம் தேதி மும்பையில் இருந்து நாக்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த மத்திய பிரதேச மாநிலம் பாலாகத் பகுதியை சேர்ந்த ஹார்டுவேர் வியாபாரி ஆகாஷ் குப்தா என்பவர் போதையில் விமான பணிப் பெண்கள் 2 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இது குறித்து அந்த பணி பெண்கள் விமான கேப்டன் கோபால்சிங் மோகன் சிங்கிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இது குறித்து கேப்டன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் குப்தாவை பிடித்து சோனேகன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் குப்தாவை கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குப்தாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறுகையில், ‘‘விடுமுறைக்காக குப்தா கோவா சென்றுள்ளார். அங்கிருந்து நாக்பூர் திரும்புவதற்காக மும்பை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் மது குடித்துள்ளார். ஜெட் ஏர்வேஸ் விமானத்ததில் பணிப் பெண்கள் உணவு வழங்கிய போது அவர்கள் கையை பிடித்து குப்தா சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

பணிப் பெண்கள் அவர்களின் தலைவருக்கு தகவல் கொடுத்தவுடன் குப்தா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர்களுடன குப்தா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கேப்டனுக்கு தகவல் அளித்தனர்’’ என்றனர்.