சட்டவிரோத குட்கா விற்பனைக்கு மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம்: உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தகவல்

சென்னை:

டை செய்யப்பட்ட குட்காவை தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய மாதம் அதிகாரிகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது என்று  உயர்நீதி மன்றத்தில் சிபிஐ  கூறி உள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு மேலும் சூடுபிடித்து உள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பசாலா போன்ற பொருட்களை தடையை மீறி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இதில் ரூ.40 கோடி அளவில் லஞ்சம் கைமாறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில்  தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை  அதிகாரிகள் மீது புகார்கள் உள்ளது. இந்த விவகாரம் குறித்து  சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மாற்றியது.

அதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ்  மற்றும் உணவுபாதுகாப்பு துறைஅதிகாரிகள் உள்பட  6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகனின் ஜாமின் மனு இன்று நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.

அப்போது செந்தில் முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆலைக்கு உரிமம் மட்டுமே வழங்கியதாகவும், முறைகேடுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ வழக்கறிஞர், கடந்த  2013 முதல் 2015 ஆண்டுவரை தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகத்தில் விற்பனை செய்ய  மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, லஞ்சம் வாங்கியதாக சிபிஐ குற்றச்சாட்டு இருப்பதால்  ஜாமின் வழங்க முடியாது என கூறி வழக்கை 22ந்தேதிக்கு வைத்தார்.

சிபிஐ-ன் இந்த தகவல் தமிழக அரசுக்கும் மேலும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.