காஷ்மீர் ஸ்டைலில் தமிழகத்தில் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம் ; இருவர் கைது

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம் நடந்தது நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது.  தற்போது அதைப் போல் தமிழகத்திலும் ஒரு கூட்டு பலாத்காரம் நிகழ்ந்துள்ளது.  கோவில் என்றும்  பாராமல் கூட்டு பலாத்காரம் செய்த இரு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிகழ்வு நாகப்பட்டினம்  மாவட்டத்தில் நடந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிப்பாளையும் காமராஜர் காலனியில் கணவரை இழந்த ஒரு பெண் கட்டிட தொழிலாளியாகப் பணி புரிந்து வருகிறார்.  அவரது சகோதரியின் வீட்டில் தங்கி இருக்கும் அவர் நேற்றிரவு தனது பணியை முடித்து விட்டுச் சென்றுள்ளார்.  அவரை  பின் தொடர்ந்து வந்த அருண்ராஜ் மற்றும் ஆனந்த் ஆகிய இரு இளைஞர்கள் அவரைத் தாக்கி அவருடைய கூலிப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் நில்லாமல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டுக்குச் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப் பெண் தற்போது நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த இரு இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.