டெல்லி: பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த  7000 பேருக்கு 2 நாள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை இன்று தொடங்கி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  ரஷ்யா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில், முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஜனவரி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி 30 கோடி பேருக்கு தொற்று  தடுப்பூசி போட மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய அரசு ‘CoWin’ என்ற பிரத்யேக செயலியை வடிவமைத்து அதன்மூலம் ஒத்திகை தகவல்கள் சேமிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்மூலம், கொரோனா தடுப்பூசியை பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வது, குளிரூட்டப்பட்ட வசதிகளில் சேமிப்பது, மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது, பயணிகளுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி போட்டபின் ஏற்படும் ஒவ்வாமை பிரச்னைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ளவும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்று முதல்கட்டகமாக  பஞ்சாப், குஜராத், ஆந்திரா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தொடங்கி நடை பெற்று வருகிறது.  முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவர்கள் தயார்படுத்தப்பட்டனர்.

இதற்காக குறிப்பிட்ட  4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் அதற்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் ஒவ்வொரு முறையிம் தலா 25 பேர் வீதம் 5 முறைகளில் சுமார் 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அனைத்திலும் 4 அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆரம்பகட்ட பரிசோதனை, பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் இடம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என்பதை அறிய தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் 30 நிமிடம் அங்கே அமர வைக்கப்பட்டு, அவர்களை  மருத்துவ அதிகாரிகள், டாக்டர் உள்பட 5 பேர் கண்காணித்தனர்.  எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பயனாளிகள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இத்துடன்,   தடுப்பூசி சேமித்து வைக்கப்படும் மையத்தில் இருந்து ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு எவ்வளவு மணி நேரத்தில் தடுப்பூசி மருந்து வந்து சேருகிறது என்ற நேரம் கணக்கிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் மருந்தின் குளிர்பதன தன்மை ஆய்வு செய்யப்பட்டது.ஒத்திகை நடைபெறும் இடத்துக்கு வந்ததும் மீண்டும் தடுப்பூசி மருந்து பற்றிய உறுதி தன்மை சோதனை செய்யப்பட்டதாகவும், இந்த தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.