தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தில் இரு கல்லூரி பேருந்துக்கள் நேருக்கு மோதிக்கொண்டன. இதில் 20 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.

இரண்டு கல்லூரிகளுக்கு இடையே உள்ள போட்டி காரணமாக, அந்த கல்லூரி பேருந்துகளின் ஓட்டுனர்களும் தங்களது திறமையை சிறிய பாலத்தில் காட்ட முனைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் ஆதித்தனர் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தும், தூத்துக்குடி ஹோலிகிராஸ் கல்லூரி பேருந்தும்  தூத்துக்குடி அருகே உள்ள ஆத்தூர் ஆற்று பாலத்தில் எதிர் எதிர் திசையில் வந்தன. ஒருவருக்கு ஒருவர் வழிவிடாமல் நேராக சென்றதால் இரண்டு பேருந்துகளும்  நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டன.

இதில் இரண்டு பேருந்துகளின் முன் பாகமும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 15 மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயம்பட்ட மாணவிகளை ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தின்போது பேருந்துகள் ஆற்றில் விழுந்திருந்தால் மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், அதிர்ஷ்டவசமாக இரு பேருந்துகளும் மோதி பாலத்திலேயே நின்றுவிட்டதால் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.