Random image

நீதிபதி லோயா மரணத்தின் போது உடன் இருந்த இருவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

மும்பை:

நீதிபதி லோயா மரணத்தின் போது உடனிருந்த 2 நீதிபதிகள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த குஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கின் மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இவரது மரணத்தை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி லோயா நாக்பூரில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்தகொள்ள சென்றபோது தான் அங்கு உயிரிழந்தார். அப்போது அவருடன் 4 நீதிபதிகள் உடன் இருந்தனர். இதில் புனே நீதிபதி மோடாக், தற்போது தானே மாவட்ட நீதிபதியாக உள்ள ஜோஷி ஆகிய 2 பேரும் அடங்குவர். இதில் மும்பையில் இருந்து நாக்பூருக்கு நீதிபதி லோயாவுடன் பயணம் செய்ததாக நீதிபதி மோடாக் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதிகள் மோடாக், ஜோஷி உள்பட 6 நீதிபதிகளின் பெயர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துகான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்த பட்டியல் உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு அனுப்பி வைக்கபப்பட்டது.

இந்த பட்டியலுக்கு கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மோடாக், ஜோஷி உள்பட 6 பேரும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்கவுள்ளனர். இந்த பரிந்துரை பட்டியலில் பல மூத்த நீதிபதிகளின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.