பணம் செலுத்தி சிறையில் வசித்த அதிசய மலேசியன் பயணிகள் !

ங்காரெட்டி, தெலுங்கானா

சிறை வாசம் பற்றி தெரிந்துக் கொள்ள இரு மலேசிய சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுத்து சிறையில் வசிக்கின்றனர்.

தெலுங்கானா மாவட்டத்தில் 1796 ஆம் வருடம் நிஜாமால் கட்டப்பட்ட சிறை ஒன்று சங்காரெட்டி சிறைச்சாலை ஆகும்.    இந்த சிறையில் தங்கி சிறை வாழ்வை அனுபவிக்க  தெலுங்கானா அரசு “FEEL THE JAIL”  என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  இதற்கு சிறையை உணருங்கள் என தமிழில் பொருள் ஆகும்.

இதற்கு அரசு ஒரு நாளைக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கிறது.   இதை செலுத்துபவர்கள் சிறைக்கைதிகளைப் போல் நடத்தப்படுவார்கள்.   கைதிகளுக்கு வழங்குவது போல உணவு வழங்கப்படும்.  கைதிகளுக்கு தருவது போல இவர்களுக்கும் பணிகள் தரப்படும்.   அத்துடன் கைதிகளுக்கு தரப்படும் குறைந்த பட்ச வசதிகளே அளிக்கப்படும்.

இந்த தகவலை இணையம் மூலம் அறிந்த இரு மலேசிய சுற்றுலாப் பயணிகள் அதிகாரிகளை அணுகி கட்டணம் செலுத்தி இருதினங்கள் இங்கு தங்கி உள்ளனர்.    அவர்களுக்கு தோட்ட வேலையும் சுத்திக்கரிக்கும் வேலையும் தரப்பட்டுள்ளது.   அத்துடன் அவர்களுக்கு உணவு சமைக்க அனுமதி அளிக்கப்படவில்லை.   சிறையில் உள்ள இந்திய உணவு வழங்கப்பட்டுள்ளது.   இந்த இருநாள் வாழ்க்கையை தாங்கள் மிகவும் ரசித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிறை அதிகாரி சந்தோஷ் குமார் ராய், “இருவரும் தங்கள் சிறை வாழ்க்கையை மிகவும் ரசித்தனர்.     இது வரை 47 பேர் இது போல சிறை வாழ்க்கை இந்த திட்டத்தின் கீழ் வாழ்ந்துள்ளனர்.  மேலும் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இது போல் சிறை வாழ்க்கை வாழ முன் வருவார்கள் என நம்பப்படுகிறது. “  என கூறி உள்ளார்.