மைசூர் தசரா இறுதி நாளில் சோகம்: அரச குடும்பத்தை சேர்ந்த 2 பேர் அடுத்தடுத்து மரணம்

மைசூரு:

சரா விழாவில் இறுதிநாளான நேற்று மைசூரு அரச குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரச குடும்பத்தில் தசராவின் இறுதி நாளில் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தசரா விழாவுக்கு பேர்போனது கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் மைசூரு தசரா திருவிழா. இந்த தசரா திருவிழா மைசூரு அரச குடும்பத்தினரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும். இந்த நிலையில்,  தசரா திருவிழா வின் கடைசி நாளான நேற்று அரச குடும்பத்தை சேர்ந்த ராஜமாதாவின் தாய் புட்டா சிகாமணி என்பவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 98. உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மரணமடைந்ததார்.

இந்த மரணச் செய்தி அரச குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முந்தைய அரசர் ஸ்ரீகாந்ததத்தா வடியாரின் சகோதரியும், இளவரசியுமான விஷாலாட்சி தேவி (வயது55) என்பவர் பெங்களூர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் உயிரிழந்தார்.

இவர்களின் இறுதிச்சடங்கு வரும் 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நாளில் அரச குடும்பத்தை சேர்ந்த 2 பேர் மரணத்தை தழுவியது அரச குடும்பத்தில் மட்டுமல்லாது மாநில மக்களிடையே அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.