தராபாத்

விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு இரு இளைஞர்கள் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் பரத் மற்றும் அவர் சகோதரர் கல்யாண் ஆகிய இருவரும் திருப்பதி செல்ல கடந்த சனிக்கிழமை இரவு வந்துள்ளனர்.  கார் நிறுத்தத்தில் நின்றிருந்த அவர்களை கடந்து ஒரு விமானப் பணிப்பெண் சென்றுள்ளார்.  இண்டிகோ விமான நிறுவனத்தில் பணி புரியும் அவர் பணி முடிந்து வீடு திரும்பும் அந்த நேரத்தில் அவரைக் குறித்து ஏதோ மட்டமாக கூறி உள்ளனர்.

உடனடியாக அந்தப் பெண் அருகிலிருந்த போக்குவரத்து போலீசாரிடம் சொல்லி அவர்கள் அந்த இரு இளைஞர்களையும் விமான நிலைய காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்.   காவல் நிலையத்துள் நுழைந்ததுமே இருவரும் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு கெஞ்சியுள்ளனர்.   அந்தப் பெண் பதில் ஏதும் சொல்லாததால் காலில் விழுந்து முறையிட்டுள்ளனர்.

அதன் பின் அந்தப் பெண் அவர்களை மன்னித்து அவர்களைப் பற்றி புகார் ஏதும் தராததால் அவர்களை சில மணி நேரத்துக்குப் பிறகு போலீசார் விடுதலை செய்துள்ளனர்.   அவர்கள் அந்தப் பெண்ணின் காலில் விழும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் காவல்துறை தரப்பில், “அந்த இளைஞர்கள் இருவரும் கார் பார்க்கிங் பகுதியில் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  அதைக் கண்ட அந்த விமான பணிப்பெண் எங்களிடம் சொல்லவே நாங்கள் அவர்களை இங்கு அழைத்து வந்தோம்.  அந்தப் பெண் ஏதும் புகார் எங்களிடம் அளிக்கவில்லை.  அதனால் நாங்கள் நியூசென்ஸ் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=69XuEx3rsV0]