கொல்கத்தா:

பாங்காங்கில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதல் தொற்று அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கடந்த மாதம் (ஜனவரி) 15ந்தேதி முதல் சீனாவிற்கு சென்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வர அனுமதி  ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களிடமும் விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்தூரில் 2 வயது சிறுவன் உட்பட இருவர் கொரோனா வைரஸ் அறிகுறிகள் உடன் மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு செய்து வருகின்றனர். அதுபோல ஹரியானா மாநிலத்தின் ஹிசாரில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட நபரை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இவர் தற்போது ஹிசார் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,  பாங்காங்கில் இருந்து  கொல்கத்தா சர்வதேச  விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகள் நாவல் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டுள்ளதாக  இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள்  இன்று  தெரிவித்தனர்.

ஹிமாத்ரி பார்மன் என்ற பயணிக்கு கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சோதனையின்போது, அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றம், நேற்று நாகேந்திர சிங் என்ற பயணிக்கு நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது என்றும்,  இருவரும் பெலியகட்டா ஐடி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.