கொழும்பு:

முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகக் கோரி புத்த பிட்சுகள் சாகும் உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், 2 முஸ்லிம் கவர்னர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கவர்னர் ஆஜாத் ஷாலே, கவர்னர் ஹிஜ்புல்லா.

இலங்கை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

இந்நிலையில், அதிகாரத்தில் இருக்கும் முஸ்லிம்கள் வெளியேற்றக் கோரி புத்த பிட்சுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து,மேற்கு மாகாண கவர்னர் ஆஜாத் ஷாலே, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் ஹிஜ்புல்லா ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

ராஜினாமா செய்தபின் ஹிஜ்புல்லா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்காக பதவியை ராஜினாமா செய்கின்றேன். முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்கின்றேன்.

எனது ராஜினாமா என் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.பாகுபாடு இன்றி நேர்மையான முறையிலே நான் பணியாற்றி வந்தேன்.

ஆனால் பழமைவாதிகள் என் ராஜினாமாவை கோருகிறார்கள். நான் ராஜினாமா செய்யாவிட்டால், முஸ்லிம் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்துகின்றனர்.

எனவே, என் சமுதாயத்தினரின் நலன் கருதி கவர்னர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், இலங்கை அரசில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.