சென்னை இரண்டாம் விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் ஆய்வு

சென்னை

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விமான நிலையக் குழுவினர் இரு இடங்களை ஆய்வு செய்துள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் உள்ள உள்நாடு மற்றும் சர்வதேச மையங்களில் அதிக அளவு பயணிகளின் வருகையைத் தொடர்ந்து, சென்னையின் இரண்டாவது விமானநிலையம் கட்ட (ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) இந்திய விமான நிலையக் குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநில அரசிடம் இடத்தை தேர்வு செய்து தருமாறு கோரியிருந்தது.

அதையொட்டி சென்ற மாதம் சென்னையை அடுத்த திருப்போரூரில் ஆய்வு நடத்தப்பட்டது.  அந்த இடம் கல்பாக்கம் மற்றும் தாம்பரம் விமானப்படை விமான நிலையத்துக்கு இடையில் அமைந்திருந்தது.  எனவே அந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பது பாதுகாப்புக்கு ஏற்றது இல்லை என அறிவிக்கப்பட்டது.  அதையொட்டி அங்கு இரண்டாம் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

அதையொட்டி மாநில அரசு காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் இடையில்  உள்ள பந்தலூர் மற்றும் மாமண்டூர் – செய்யாறு இடையில் உள்ள மற்றொரு இடம் ஆகியவற்றைப் பரிந்துரை செய்தது.   விமான நிலையக்குழு அதிகாரிகள் நேற்று அந்த இரு இடத்தையும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த இடங்கள் ஆவண ரீதியாக சரியாக உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  மாநில அரசு தென் சென்னை மற்றும் தற்போதைய விமான நிலையத்தில் இருந்து அதிக தூரம் இல்லாத இடங்களைப் பரிந்துரை செய்து வருகிறது.  இந்த இரு இடங்களுமே சென்னையில் இருந்து சுமார் 80 கிமீ தூரத்துக்குள் உள்ளன.

நேற்று ஆய்வு செய்த அதிகாரிகள் குழு டில்லிக்கு ஒரு ஆய்வறிக்கையை அனுப்ப உள்ளது.  அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அமைச்சகம் தேர்வு செய்யும் இடங்களில் மேற்கொண்டு ஆய்வு நடத்திச் சரியான இடம் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.   வரும் 2024க்குள் இந்த விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி