லண்டன்: இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள 2 சுழற்பந்து வீச்சாளர்களான யஸ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கியமான நேரங்களில் அணிக்கு பெரிய பக்கபலமாக இருக்கிறார்கள்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் பாகிஸ்தானிடம், இந்தியா மோசமாக தோற்றதையடுத்து, இந்திய அணியில் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கண்டெடுத்து சேர்க்க வேண்டியதன் கட்டாயம் உணரப்பட்டது. அந்த முயற்சியின் விளைவாக தற்போது சஹலும், குல்தீப்பும் அணியில் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள், நடு ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர். ஏனெனில், நடு ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது மட்டும் முக்கியமல்ல; மாறாக, விக்கெட்டுகளை எடுப்பது அதைவிட மிக முக்கியம்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரானப் போட்டியில், சஹலின் சிறப்பான செயல்பாடு அந்த அணி‍யை 227 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திபோது, பாகிஸ்தானின் மிக முக்கியமான 2 விக்கெட்டுகளான ஃபக்கர் ஸமான் மற்றும் பாபர் ஆஸம் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார் குல்தீப்.

இந்த 2 சுழற்பந்து வீச்சாளர்களும, கேப்டன் விராத் கோலியின் நம்பிக்கையைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.