மலேசியாவில் இரண்டு தமிழர்கள் தூக்கிலிடப்பட்டனர்: மனித உரிமை அமைப்புகள்  கண்டனம்

லேசியாவைச் சேர்ந்த இரு தமிழர்கள் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டனர். இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

மலேசியா நாட்டில் பத்துமலை பகுதியைச் சேர்ந்தரமேஷ்  (45 ) மற்றும் சுதர் (40 ) இருவரும் சகோதரர்கள். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.  இவர்கள்  கடந்த 2006ம் ஆண்டு கிருஷ்ணன் இராமன் என்பவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டனர். வழக்கின் முடிவில் 2010ம் ஆண்டு  இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பல்வேறு சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி 24ம் தேதி இவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அது தள்ளிவைக்கப்பட்டு, மார்ச் 17ம் தேதி (இன்று) தூக்குதண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறிப்பிடப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாகவே நேற்று முன் தினம் (15ம் தேதி) அதிகாலை கஜாங் சிறைச்சாலையில் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

மனித உரிமை அமைப்புகள் பலவும், இவர்களுக்கான தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்த கடுமையாக முயற்சித்து வந்தன.

இவர்களால் கொல்லப்பட்டதாக சொல்லப்படும்  கிருஷ்ணன் ராமன் என்பவரது மனைவியும், “இவர்களுக்கு தூக்குதண்டனை வேண்டாம். ஆயுள் தண்டனையாக மாற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே இருவரும் தூக்கிலடப்பட்டுள்ளனர். இது மலேசிய வரலாற்றில் முதல் முறை.

மனித உரிமை ஆர்வலரான ஷாமினி தர்ஷினி என்பவர், “மனித உரிமை விவகாரத்தில் மலேசியா தொடர்ந்து பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது.  மலேசியாவில் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும்”  என்று தெரிவித்துள்ளார்.  பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மலேசிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

தூக்கிலிடப்பட்ட இருவரும் தாங்கள் நிரபராதி என்றும், இரு தரப்புக்கு இடையே சண்டை நடந்தபோது தாங்கள் விலக்கிவிட  சென்றதாகவும் கடைசி வரை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.