கொல்கத்தா: பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையம் வந்த 2 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரசானது அதி தீவிரமாக பரவி வருகிறது. அதன் எதிரொலியாக அந்நாட்டுடன் விமானம், கப்பல் போக்குவரத்து சேவைகளை இந்தியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

மேலும், புது வகை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு பிரிட்டனில் இருந்து ஞாயிற்றுக் கிழமை கொல்கத்தா வந்த 2 பயணிகளுக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம் 222 பேர் வந்த அந்த விமானத்தில், அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் இருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியிருக்கும்.

இப்போது சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணைய உதவியுடன், விமானத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருந்த 2 நபர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களை சுகாதாரத் துறை தொடர்பு கொண்டு, 2 வாரங்களுக்கு வீட்டு தனிமைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.