புதுடெல்லி: கொரோனா காரணமாக, பரஸ்பரம் இரண்டு நாடுகளிலும் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, பல இந்திய நகரங்களுக்கு இருவழிப்பாதை விமானங்களை, ஜூலை 12 முதல் இயக்கவுள்ளன ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ், எடிஹாட் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமான நிறுவனங்கள்.
இந்த விமானங்கள், டெல்லி, கொச்சின், பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இருவழிப்பாதை முறையில் இயக்கப்படவுள்ளன. அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய அமீரகங்களிலிருந்து இந்த விமானங்கள் இயக்கப்படும்.
இந்த விமானங்களை, இந்தியாவில் சிக்கியுள்ள யுஏஇ நாட்டவர்களும், அங்கே சிக்கியுள்ள இந்தியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், வரும் ஜூலை 31ம் தேதிவரை, வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது. ஆனால், இடைப்பட்ட காலங்களில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, விமான சேவைகள் இடையிலேயே துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், விமானப் போக்குவரத்து தொடர்பான இந்த ஒப்பந்தம் குறுகிய காலத்திற்கானது என்று கூறப்படுகிறது. யுஏஇ – இந்தியா இடையிலான விமானப் போக்குவரத்து ஒப்பந்தம், வெறும் 15 நாட்களுக்கானது என்று கூறப்படுகிறது.