நெல்லை:

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனை ஊடங்கை மீறியதாக கூறி,   காவல்துறையினர் சித்ரவதைச் செய்து கொலை செய்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் விசரணை யில், கடந்த இரு வாரத்திற்கு முன்பு மேலும் ஒருவர் காவல்துறையினரின் டார்ச்சரால்  பலியாகி உள்ளது அம்பலமாகி உள்ளது.

ஆனால், காவல்துறையினருக்கு ஆதரவாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளது மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.  #JusticeForJayarajandBennicks ஹேஷ்டேக் டிரென்டிங்காகி வருகிறது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கொடூரமான சம்பவம் குறித்து,  மாஜிஸ்திரேட் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதொடர்பாக, நீதிவிசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன்பும், இந்த போலீசார் , பலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதில் ஒருவர் மரணமடைந்து இருப்பதாக, சிலர் சாட்சி அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும், போலீஸ் விசாரணையிலேயே துன்புறுத்தப் பட்டு இருப்பதும்,  தூத்துக்குடி மாவட்ட நீதிபதி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதோடு மட்டுமல்லாது, இந்த விசாரணை அறிக்கையையும் நீதிபதி, கடந்த 25ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவத்நமாக மாவட்ட நீதிபதி சரவணன், சாத்தான்குளம் காவல்நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சை தவிர்த்து மற்ற துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சாத்தான்குளம் காவல்நிலையத்தில், ஒரு மைனர் பையன்  உள்பட 8  பேர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துன்புறுத்தல் 3 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. போலீஸ் நண்பர்கள் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் ஸ்டேசன் அதிகாரிகள் இந்த பாதகச்செயலை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் விவகாரம் தொடர்பாக தற்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள   சாத்தான்குளம், சப் இன்ஸ்பெக்டர்களான பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷின் பங்கு அதிகம் என்றும், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் உத்தரவின் பேரிலேயே இந்த துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

பென்னிக்ஸ் சடலமாக

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவல்துறையினரின் சித்ரவதை காரணமாக மகேந்திரன் என்பவர் மரணம் அடைந்துள்ள தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீசாரின் விசாரணையிலேயே இவர் மரணமடைந்ததாக தகவல் பரவிய நிலையில், அவரது சகோதரர் துரை கைது செய்யப்பட்டார். அவரை மிரட்டிய காவல்துறையினர்,  மகேந்திரன் போலீஸ் விசாரணை யில் இறந்த தகவலை வெளியே சொன்னால், துரையும் அதேபோல் கொல்லப் படுவார் என்று போலீசார் எச்சரித்ததாகவும், மகேந்திரனின் உடலை போஸ்ட் மார்ட்டம் கூட செய்யாமல், குடும்பத்தினரிடம் சாத்தான்குளம் போலீசார் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ராஜாசிங், காவல்துறையினரின் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தற்போது உடல்நலம் தேறிய நிலையில், அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

ராஜாசிங் மாவட்ட நீதிபதி சரவணனிடம்  கூறியதாக வெளியான தகவலில்,  தன்மீது  பொய் வழக்கு போட்டு, கைது செய்ததாகவும்,   சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் கொண்டு வரப்பட்டு,  அங்கு போலீஸ் நண்பர்கள் என்ற பிரிவினர் என்னை கட்டிவைத்து, கை, கால், தலை உள்ளிட்டவைகளில் பயங்கரமாக அடித்தனர். அவர்களோடு இணைந்து,  சப்-இன்ஸ் பெக்டர்களும் என்னை கடுமையாக தாக்கினர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரிலேயே அவர்கள் என்னை கடுமையாக தாக்கினர்  என்று தனது உடலில் உள்ள காயங்களையும், அது தொடர்பாக புகைப்படங்களையும் ஒப்படைத்துள்ள தாக கூறப்படுகிறது. மேலும்,  தட்டார் மடம் போலீஸ் ஸ்டேசனில் தன்னை துன்புறுத்தியதாக போலீசார் கணேஷ் மற்றும் மகாராஜன் மீது ராஜாசிங் புகார் அளித்துள்ளார்.

தனது அந்தரங்க பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து அடித்தால், அப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக, தான் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டதாக ராஜாசிங் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த  16 வயது கூட ஆகாத மைனர் சிறுவனையும் வழக்கு சம்பந்தமாக கைது செய்து, கடுமையாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால், அந்த சிறுவன எந்த வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டார் என்பது காவல்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட வில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில், விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஆண்கள் அங்குள்ள போலீசாரால் கடுமையாக தாக்கப்படுகின்றனர். போலிஸ் விசாரணையின் போது தாங்கள் தாக்கப்படவில்லை என்று நீதிபதியிடம் கூற அவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இதற்காக, அவர்கள் நீதிபதி முன் நிறுத்தப்படும்போது ஒரு குறிப்பிட்ட இடைவெளி தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்சும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி யிலேயே நீதிபதி சரவணன் முன் ஆஜர்படுத்தப்பட்டிருந்தாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கடந்த 20ம் தேதி, உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே கோவில்பட்டி சிறைக்கு கொண்டுவரப்பட்டனர். இரண்டு நாட்களுக்குள்ளாக அவர்கள் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெயராஜ் – பென்னிக்ஸ்

ஆனால், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் லாக்கப் மரணம் இல்லையென்றும், அவர்கள் போலீஸ் விசாரணையின் போது இறக்கவில்லை என்றும், சிறையில் இருந்தபோதே மரணமடைந்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்ப வழக்கறிஞர் பி.எம். விஷ்ணுவர்தன் கூறியதாவது, ராஜாசிங்கின் விவகாரமே தன்னை இந்த வழக்கில் சட்டரீதியாக வாதாட தூண்டியது. சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அறை, முதல்மாடியில் உள்ளது. அதற்கருகில் 4 அறைகள் உள்ளன. இந்த அறைகளிலேயே, விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,  இந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.