சாலை விதி மீறலா ? சக்கரத்தை கிழிக்கும் வேகத்தடை இதோ

டில்லி

வாகன ஓட்டிகள் சாலையில் தவறான திசையில் வாகனத்தை செலுத்தினால் சக்கரத்தை கிழிக்க  புதிய வேகத்தடை அமைப்பு அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் சாலையின் இடது பக்கம் செல்ல வேண்டும் என்பது சாலை விதிகளில் ஒன்றாகும்.   அதே போல குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே யு டர்ன் செய்ய வேண்டும் என்பதும் சாலை விதிகளில் முக்கியமான ஒரு விதி ஆகும்.   ஆனால்  இந்த இரு விதிகளையும் வாகனம் செலுத்துவோர் கடைபிடிப்பதில்லை.  பெரும்பாலான விபத்துக்கள் நேரிட இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

பொதுவாக இவ்வாறு சாலை விதிகளை மீறும் போது மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.   பலர் அபராதத்துக்கு பயந்து அவ்வாறு விதிகளை மீறுவதில்லை.    ஆனால் காவல்துறையினர் அருகில் இல்லை என்றால் அவ்வாறு மீறுபவர்களும் அதிக அளவில் உள்ளனர்.  இதனால் அவர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி மற்றவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகி விடுகிறது.   இதை தடுக்க ஒரு புதிய முறை அமைக்கப்பட உள்ளது.

டயர் கில்லர் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பை சாலையில் வேகத்தடையில் அமைத்து விட உத்தேசிக்கப் பட்டுள்ளது.   இதில்  ஒரு பக்கம் கூர்மையாக உள்ள பொருட்கள் பொருத்தப்படும்.   அத்தகைய வேகத்தடைகள் மீது வாகனங்கள் சரியான திசையில் செல்லும் போது சாதாரணமாக செல்ல முடியும்.    ஆனால் தவறாக எதிர்த்திசையில் இருந்து செல்லும் போது வாகனத்தின் சக்கரம் கிழிந்து விடும்.

அத்துடன் இவைகளை சிறிது மாறுபாடுடன்,  அதாவது இரு பக்கமும் கூர்மையுள்ளதாக மாற்றி அமைக்கப்பட்டு சாலையின் இடையில் பொருத்தி விட்டால் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் சாலையைக் கடந்து யு டர்ன் செய்ய முடியாது.   அவ்வாறு செய்யும் போதும் சக்கரம் கிழிந்து விடும்.

இந்த முறை இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே உள்ளது.   இந்தியாவிலும் தற்போது சில தினங்கள் சோதனைக்காக அமைக்கலாம் என்னும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.    புனே நகரில் உள்ள சாலைகளில் இது அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.     அத்துடன் டில்லி – நொய்டா சாலையிலும் இவ்வாறு அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படும் என தெரிய வந்துள்ளது.