டில்லி

த்திய மின் அமைச்சகம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மின் வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க விருப்பம் கோரி உள்ளது.

தற்போது அனைத்து மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்தியை உபயோகிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்த மின் வாகனங்களுக்கு அவ்வப்போது சார்ஜிங் செய்ய வேண்டியது அவசியமாகும்.

தற்போது யூனியன் பிரதேசமான டில்லியில் மட்டும் இவ்வாறு சார்ஜிங் செய்யும் நிலையங்கள் உள்ளன. அதுவும் டில்லி நகர்ப் பகுதியில் மட்டுமே இந்த நிலையங்கள் அமைந்துள்ளன. இதை நாடெங்கும் அமைக்க மத்திய மின் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக இதற்கான பணிகள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இம்மாநிலத்தில்  லக்னோ, கான்பூர், வாரணாசி, ஆக்ரா, நொய்டா, பிரயாக்ராஜ், காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய நகரங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைய உள்ளன. அவ்வாறு சார்ஜிங் நிலையம் அமைக்க விரும்புவோரிடம் இருந்து மத்திய அரசு விருப்ப மனு கோரி உள்ளது. இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது