வாஷிங்டன் :

மெரிக்க போர்க்கப்பலான தியோடர் ரூஸ்வெல்டின் கேப்டன் பிரட் கோஸியர் கடந்த வாரம் தனது கப்பலில் இருக்கும் கப்பற்படை வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும். அமெரிக்க அரசு உடனடியாக அனைவரையும் காப்பாற்ற கோரியும் கடிதம் எழுதியிருந்தார்.

மேற்கு பசிபிக், குவாம் பகுதியில் உள்ள தனது கப்பற்படை தளத்தில் 5000 வீரர்களுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த கப்பலில் கடந்த வாரம் சுமார் 114 வீரர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டதால், கப்பலின் கேப்டன் அமெரிக்க அரசுக்கு இந்த கோரிக்கையை விடுத்தார்.

அவரின் இந்த கோரிக்கை அமெரிக்க அரசுக்கு தெரியவரும் முன்னரே இந்த செய்தி ஊடகங்களுக்கும், பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் தெரியவந்ததே அவரை பணியிலிருந்து நீக்குவதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க கப்பற்படை செயலாளர் தாமஸ் மாட்லி, கேப்டன் கோஸியரின் மிகைப்படுத்தப்பட்ட கடிதமே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று விளக்கம் கூறியிருக்கிறார்.

மேலும், இது போன்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கோஸியர் எடுத்த மோசமான நடவடிக்கையே அவரை நீக்க மற்றொரு காரணம் என்று சொல்லியிருக்கிறார்.

கப்பலில் உள்ள அனைவரின் உயிரை காப்பற்ற அவர் செய்த நடவடிக்கை தான் என்றபோதிலும், இதை மிகைப்படுத்திய விதம், அந்த வீரர்களின் குடும்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது.