ஜமால் கொலை எதிரொலி: சவுதி அதிகாரிகளின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா

பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதி அதிகாரிகளின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Saudi

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, ”ஜமால் கொலை குறித்து வெளிவரும் அனைத்துத் தகவல்களையும் பிற நாடுகளுடன் இணைந்து கவனித்து வருகிறது. ஜமால் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள சவுதி அதிகாரிகளின் விசா ரத்து செய்யபப்டுகிறது. மேலும் அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் கொல்லப்பட்ட ஜமாலின் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி கடந்த வாரம் வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக்கொண்டது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.