தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சாதிப்பற்று! :ஆர்.சி. சம்பத்

பொலிடிகல் பொக்கிஷம்: 3

      திமுக – டி.எம்.கே. ஆனது எப்படி தெரியுமா?

   திமுகவை ஆங்கிலத்தில் டி.எம்.கே (D.M.K) என்கின்றனர். ஆனால், ஆரம்ப காலத்தில் இந்த கட்சி, தன் பெயரை டி.பி.எப் (T.P.F)  என்றுதான் குறிப்பிட்டு வந்தது. அதாவது ‘திராவிடியன் புரோகிரசிவ் பெடரேசன்’ (DRAVIDIAN PROGRESSIVE FEDARATION) என்பதே இக்கட்சியின் ஆங்கிலப் பெயர்.  இது எப்படி டிஎம்கே ஆயிற்று?

சொன்னால் ஆச்சரியப்படுவர் சிலர். திராவிட இயக்கக்காரர்களுக்கு அப்போது, பகை ஏடாக விளங்கிய இந்து, நாளேடு சூட்டிய பெயர் இது.

அண்ணா
அண்ணா

திமுக ஒருமுறை மும்முனைப் போராட்டம் ஒன்று நடத்தியது. அப்போதைய முதல்வர் ராஜஜாஜியின் புதிய (குல) கல்வித் திட்டத்தை எதிர்த்து அவர் வீட்டு முன்  போராட்டம். டால்மியாபுரத்திற்கு, கல்லக்குடி என பெயர் மாற்றக்கோரி ரெயில் மறியல் போராட்டம், திராவிட நாடு கோரிக்கை வைப்பது, “நான்சென்ஸ்?” என்று சொன்ன நேருவுக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் . என்று மூன்று போராட்டங்களை ஒரே நாளில் மூன்று இடங்களில் நடத்தியது திமு.க.

இந்த போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்தும் வழக்கு சம்பந்தமாவும்  செய்திகளை வெளியிடும்போது, திமுகவை டிஎம்கே என்றே கேலியாக  குறிப்பிட்டது ‘தி இந்து’ ஆங்கில நாளேடு.

அதைப்படித்த கழகத் தொண்டர்கள் அண்ணாவிடம் அதைக்காட்டி, “பாருங்க, எப்படி நம் கட்சியை கிண்டல் பண்றாங்க” என்று வருத்தப்பட்டனர். படித்துப் பார்த்த அண்ணா, “அவங்க போட்டிருக்கிறதும் ஒரு வகையிலே சரிதானே, நாமும் இனிமேல் நம் கட்சியை இங்கிலிசில் டி.எம்.கே.ன்னே போடலாம். கட்சிக்கு தமிழிலே ஒரு பெயர், இங்கிலிசிலே ஒரு பெயர் எதற்கு?” என்று கூறிவிட்டார்.

அதுமுதல் திமுககாரர்களும், தங்கள் கட்சியை டி.எம்.கே என்றே குறிப்பிடலாயினர்.

உடன்பிறப்புகள் பலருக்கும்கூட தெரியாத உண்மை இது.

 

பாரதி கொடுத்த விளம்பரம்

புதுச்சேரிக்கு தப்பிச்சென்ற பாரதியார், அங்கிருந்து, “இந்தியா” என்ற பத்திரிகையை நடத்தினார். அதில் அவர் வெளியிட்ட விளம்பரம் இது:

பாரதி - இந்தியா இதழ்
பாரதி – இந்தியா இதழ்

“புதுவையில் வரமொருமுறை வெளியாகும் இந்தியா என்ற பத்திரிகைகக்க சந்தாதாரர்களை சேர்த்து கொடுப்பவர்களுக்கும், விளம்பர வகைக்கு ஏற்பாடு செய்கிறவர்களுக்கும் 100-க்கு 10 கமிஷன் கொடுக்கப்படும். ஒவ்வொரு முக்கிய ஜில்லா நகரங்களில் அவ்வவ்விடத்து வர்த்தமானங்களை விவரமாக எழுதி அனுப்புவோர்களுக்கு நமது பத்திரிகை இனாமாக அனுப்பப்படும் விஷய நயத்தைக் கவனித்து, வேறு வித சகாயங்களும், ஜன கஷ்டங்கள் என்பவற்றைத் தெளிவாக எழுத வேண்டும்.

இங்ஙனம் பத்திராதிபர்

‘இந்தியா’ 2-2-1907”

 

தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் சாதிப்பற்று!

உ.வே.சா.
உ.வே.சா.

(மறைந்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் எழுதுகிறார்)
அப்போ எனக்குப் பதினாறு வயது. சென்னையில் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்தேன். உ.வே.சாமிநாத ஐயர் அந்த அச்சகத்தில் வந்து தனது நூல்களை அச்சுக்குக் கொடுப்பார். முதல் நாள் கொடுத்துவிட்டுப் போகும் கட்டுரையை, மறுநாள் வந்து புரூப் பார்த்து பிழை திருத்திக் கொடுத்து விட்டுப் போவார்.

எனக்கு அந்த வயசிலேயே மிகுந்த தமிழ் ஆர்வம். என் அச்சக உரிமையாளர் ஒரு ஐயங்கார்.

நாரண துரைக்கண்ணன்
நாரண துரைக்கண்ணன்

அவரிடம், நான், “உ.வே.சா விடம் தமிழ் கற்க விரும்புகிறேன். நீங்கள் சிபாரிசு செய்து என்னை அவரிடம் தமிழ்பாடம் கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்” என்றேன். “அதற்கென்னடா, தாராளமாகச் செய்கிறேன்!” என்றார் அவர்.
ஒரு நாள், உ.வே.சா பிழை திருத்தி விட்டுச் சென்ற புரூப்பை எடுத்துப் படித்தேன். அதில் இரண்டொரு பிழை அப்படியே இருந்தது.  உ.வே.சா. கண்ணில் படவில்லை போலும். அந்தப் பிழையை நானே திருத்தினேன்.
மறுநாள், உ.வே.சா. வந்தார்.  பார்த்தார், “நான் கவனிக்காமல் விட்ட பிழையை யாரோ திருத்தியிருக்கிறார்களே! பலே!” என்று பாராட்டினார்.

ஐயங்கார் என்னை அழைத்து, “இந்தச் சிறுவன் தான் திருத்தினான்” என்றார்.
உ.வே.சா. என்னைத் தட்டிக் கொடுத்தார். என் தமிழார்வத்தை விசாரித்து, பாராட்டினார்.  அப்போது ஐயங்கார், “இவன் உங்களிடம் தமிழ் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறான். நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் வருவான் தமிழ் கற்றுக் கொள்ளட்டும்!” என்றார்.

கட்டுரையாளர் ஆர்.சி. சம்பத்
கட்டுரையாளர் ஆர்.சி. சம்பத்

உ.வே.சா. பதிலேதும் சொல்லவில்லை.  வேலை முடிந்து புறப்படும் போது ஐயங்காரை அச்சகத்திற்கு வெளியே அழைத்தார். இருவரும் சென்றனர்.
சற்று நேரத்தில் திரும்பி வந்த ஐயங்கார், கோபமாகத் கத்திக் கொண்டே வந்தார். “விடுடா! இந்த ஐயர் மட்டும் ஒரு அப்பிராமணன் ( அதாவது பிராமணர் அல்லாதவர்) மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இவர் மட்டும் ஒரு அப்பிராமணணுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டாராம்! என்னைத் தனியே கூப்பிட்டு, பிராமணப் பையனாக இருந்தால் தான்  தமிழ் சொல்லித் தருவேன்! என்கிறார். இவர் கிடக்கிறார். நான் உன்னை வேறு ஒருவரிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்கிறேன்! கவலைப் படாதே!” என்றார்.

(மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை.. சந்திப்போம்!)

கட்டுரையார்   தொடர்பு எண்: 9790752183

Leave a Reply

Your email address will not be published.