வெளிநாடு சென்ற இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர துபாய் விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி மறுப்பு

துபாய்

துபாயில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர அமீரக விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.

கொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் சர்வதேச விமானச் சேவை நிறுத்தப்பட்டது.  இதனால் பணி, மருத்துவம் மற்றும் சுற்றுலா தொடர்பாக வெளிநாடு சென்றிருந்த பல இந்தியர்கள் மீண்டும் தாயகம் வர முடியாமல் சிக்கித் தவித்து வந்தனர்,  இவ்வாறு அமீரகத்தில் துபாயில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர்.

இங்குள்ள சில தொண்டு நிறுவனங்கள் இந்த இந்தியர்களை மீண்டும் தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்தன.    இதற்காக அமீரக விமானச் சேவை நிறுவன விமானம் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த விமானத்தில் செல்ல நேற்று முன் தினம் அதாவது வெள்ளிக்கிழமை தாயகம் திரும்பும் கனவுகளுடன் ஏராளமானோர் விமான நிலையம் வந்து காத்து இருந்துள்ளனர்.

அவர்களுக்கு பேரிடியாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த விமானச் சேவைக்கு அனுமதி மறுத்துள்ளதாக கடைசி நேரத்தில் வந்த செய்தி அமைந்தது.   இதற்கு  இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில்  இறுதி முடிவு எடுக்க வேண்டிய விமான பயணத்துறை இயக்குநரகம் ஒப்புதல் வழங்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தங்களுக்கு எவ்வித விளக்கமும் வரவில்லை என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.  ஆனால் இந்திய ஊடகங்கள், இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்ல அமீரக அரசு கட்டுப்பாடுகள் விதித்ததால்  இந்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி வருகின்றன.   எது எப்படி இருந்தாலும் இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.