நீண்ட கால விசா அமைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம்

முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கான நீண்ட கால விசாவுக்கு  ஐக்கிய அரபு அமீரகம் அமைச்சரவை அங்கீகரித்தது.

திறமை வாய்ந்த மாணவர்கள், விஞ்ஞானிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்காகவும் வணிக வளர்ச்சிக்கான சிறந்த முதலீட்டு சூழலை உருவாக்கவே இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக யுஏஇ அமைச்சரவை தெரிவித்து உள்ளது.

அதன்படி, மருத்துவத் துறை, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பணிபுரிவோருக்கும், முதலீட்டாளர்கள், கலைஞர்கள், மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணை குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பத்து வருடங்கள் ரெஸிடென்சி விசா வழங்கவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவில், தேசிய பொருளாதாரத்தின் மேம்பாட்டிற்காக அனைத்து முக்கிய துறைகளிளும், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிறந்த மாணவர்களை ஈர்க்கும் நீண்டகால விசாக்களைப் பெறுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் அடங்கும்.

ஒருங்கிணைந்த குடும்பம் மற்றும் சமூக அமைப்பை உறுதி செய்யவும் சிறந்த குடும்பம், மற்றும் சமூக சூழலை உருவாகும் நோக்கத்தில்தான் வாழ்க்கைத் துணை குழந்தைகள் உட்பட அனை வருக்கும் இந்த விசா வழங்கப்படுவதாக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரெட்டின் இந்த 10-வருட விசா கொள்கை, நாட்டின் கல்வி வளர்ச்சியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.