ஐபிஎல் தொடருக்கு ஆசைப்படும் மற்றொரு கிரிக்கெட் வாரியம்!

துபாய்: 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியமும் விருப்பம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் துவங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் இறுதி மாதங்களில், ஆஸ்திரேலியாவில் நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ள உலகக்கோப்பை டி-20 தொடர் ரத்தானால், இந்த இடைவெளியில் ஐபிஎல் தொடர் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், யுஏஇ கிரிக்கெட் போர்டின் செயலாளர் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தியவர்கள். மேலும், இரு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச தொடர்களும் இங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

அனைத்துவிதமான கிரிக்கெட்டிற்கும் உகந்த வசதிகள் இங்குள்ளன. எனவே, வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், ஐபிஎல் தொடரை நடத்துவற்கு தயாராக உள்ளோம்” என்றுள்ளார்.

ஏற்கனவே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சார்பிலும், ஐபிஎல் தொடரை நடத்துவற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.