ஜெருசலேம்: மத்திய கிழக்கு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 2 நாடுகள், தங்களுக்கிடையில் வழக்கமான ராஜ்ஜிய உறவுகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மத்திய கிழக்கில், கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் என்ற ஒரு புதிய யூத நாடு உருவான காலத்திலிருந்து, அதனைச் சுற்றிய அரபு முஸ்லீம் நாடுகளுக்கு பகையோ பகைதான்! காலப்போக்கில், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் மோதுவதில்லை என்று முடிவுசெய்து, வழக்கமான ராஜ்ஜிய உறவுகளைப் பேணி வருகின்றன.

தற்போது, இந்தப் பட்டியலில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய ‍அரபு அமீரகமும் இணைந்து கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, வரும் வாரங்களில் இருநாடுகளுக்கும் இடையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

மேலும், இருநாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வைத்துக்கொள்வதோடு, வர்த்தக உறவுகளும் ஏற்படும். அதேசமயம், ‍பாலஸ்தீனர்களுக்கு உரிமைப்பட்ட மேற்கு கரையின் பகுதிகளின் மீது இறையாண்மை செலுத்தும் முடிவை கைவிடுவதாகவும் இஸ்ரேல் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.