துபாய்

ந்தியாவை சேர்ந்த இரு ஆண்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் மோசடி வழக்க்குகளில் தலா 517 வருடம் சிறைத் தண்டனையை அமீரக நீதிமன்றம் அளித்துள்ளது.

இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிட்னி லெமோஸ்.   இவர் தனது மனைவி வலானி மற்றும் ரியான் டிசௌஸா என்னும் மற்றொரு கோவா மாநிலத்தவருடன் இணைந்து ஒரு நிறுவனத்தை துபாயில் நடத்தி வந்தார்.    இந்த நிறுவனம் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை செய்து வந்தது.    இவர் கோவா கால்பந்து போட்டிகளையும் தன் செலவில் நடத்தி வந்தார்.

லெமோஸ் தன்னிடம் முதலீடு செய்யப்பட்ட பணத்தை தனது மனைவி வலானி நடத்தும் ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கு மாற்றி சுமார் 20 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு மோசடி செய்துள்ளார்.   இந்த மோசடி குறித்து இவர்கள் மூவர் மீதும் மொத்த்ம் 515 வழக்குகள் பதியப்பட்டன.    இந்த வழக்கை அமீரக நீதிபதி முகமது ஹனாபி என்பவர் விசாரித்து வந்தார்.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.   மொத்தமுள்ள 515 வழக்குகளில் 513 வழக்குகளில் தலா ஒரு வருடம் வீதம் மூவருக்கும் 513 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது   மீதமுள்ள இரு வழக்குகளில் தலா இரு வருடம் என 4 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.   மொத்தம் மூவருக்கும் தலா 517 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிபதி முகமது ஹனாபி, “குற்றவாளிகள் 7000 அமிரக வாசிகளை ஏமாற்றி உள்ளனர்.   அவர்களுடைய வாழ்க்கை சேமிப்புகளை தங்கள் மோசடியால் அபகரித்துள்ளனர்.    அதனால் அதிகபட்ச தண்டனையாக 500 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இனி துபாயில் இது போல மோசடி செய்ய நினைப்போருக்கு ஒரு எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு அமையும்.   மேலும்  இந்த குற்றவாளிகளின் அனைத்துச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.    அவைகளை ஏலம் விட்டு முதலீட்டாளர்களின் பணத்தை இழப்பீட்டுடன் திருப்பித் தர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.’  என தெரிவித்துள்ளார்.