ஐக்கிய அரபு அமீரகத்தை அயல்நாடாக கருதக் கூடாது : பினராயி விஜயன்

திருவனந்தபுரம்

கேரள வெள்ளத்துக்கு நல்லெண்ண அடிப்படையில் உதவும் ஐக்கிய அரபு அமீரகத்தை அயல் நாடாக கருதக்கூடாது என பினராயி விஜயன் கூறி உள்ளார்.

கடந்த 2004 ஆம் வருடம் சுனாமியால் கடும் பேரழிவு நிகழ்ந்தபோது பல வெளிநாடுகள் உதவ முன் வந்தது.   அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதை மறுத்தார்.  அது முதல் இந்திய அரசு கொள்கை அடிப்படையில் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்து வருகிறது.   அனைத்து பேரழிவுகளின் சேதங்களையும் இந்தியாவால் சீர் செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்த இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   அதை ஒட்டி வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரபு அமீரகம் ரூ. 700 கோடி அளிக்க உள்ளதாக தெரிவித்தது.   பிரதமரும் கேரள முதல்வரும் இதற்கு நன்றியை தெரிவித்தனர்.   ஆயினும் இந்திய அரசு கொள்கை அடிப்படையில் இதை மறுப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “நல்லெண்ண அடிப்படையில் அமீரகம் அளிக்கும் உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.    அமீரக வளர்ச்சிக்கு இந்தியர்கள் அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மிகவும் உதவி புரிந்துள்ளனர்.  அதனால் அமீரகத்தை அயல்நாடாக கருதக் கூடாது.

அதே நேரத்தில் நான் இது குறித்து எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.    இது குறித்து மத்திய அரசுடன் கேரள அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.  பேரிடர் காலங்களில் 2016 பேரிடர் மேலாண்மை கொள்கையின்படி வெளிநாட்டு உதவிகளை ஏற்கலாம்.   மத்திய அரசு என்ன செய்கிறது என  பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.