துபாய்

ந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் விதி எண் 370 ஐ நீக்கம் செய்ததற்கு ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு நீக்கம் செய்தது. அத்துடன் மாநிலத்தை ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதியை மத்திய அரசின் நேரடி கண்காணிப்பிலும் கொண்டு வரும உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவுக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

நேற்று ஐக்கிய அரபு அமீரகம் இந்த இந்திய அரசின் விதி எண் 370 நீக்கம் செய்யும்  முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. அமீரகத்தின் தூதர் அகமது பன்னா, “இந்திய அரசு விதி எண் 370 ஐ நீக்கம் செய்து ஜம்மு மற்றும் காஷ்மீரை தனித்தனி யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது. அத்துடன் லடாக் பிரதேசத்தை மத்திய அரசின் கண்காணிப்பில்  கொண்டு வந்துள்ளது.

இந்திய அரசின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த மாற்றத்தின் மூலம் அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி மேம்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் அப்பகுதியில் ஸ்திரத்த்ன்மை மற்றும் அமைதி மேம்படும் என்பதையும் நாங்கள் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.