சென்னை : உபேர் டாக்சி தீப்பற்றி எரிந்தது : பயணியும் ஓட்டுனரும் தப்பினர்.

சென்னை

சென்னை டிடிகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த உபேர் டாக்சி திடிரேன திப்பிடித்து எரிந்து சாம்பலானது.

சென்னையை சேர்ந்த பல்லவி சிங் என்னும் பெண் நேற்று முன் தினம் இரவு உபேர் டாக்சியில் பயணம் செய்துக் கொண்டிருந்துள்ளார்.   அவர் உபேர் நிறுவனத்தின் டாடா இண்டிகா கார் மூலம் பயணம் செய்துக் கொண்டு இருந்துள்ளார்.   அப்போது புகை மண்டலம் ஒன்று திடீரென தோன்றியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அப்போது அந்த கார் டிடிகே சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்துள்ளது.   அவருடைய கால் வைக்கும் பகுதியில் சூடாக பல்லவி உணர்ந்துள்ளார்.   அதே நேரத்தில் காரின் ஏசி பகுதி மூலம் புகை வரத் தொடங்கி உள்ளது.  இது குறித்து பல்லவி சிங் ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஓட்டுநர் அதை கண்டு கொள்ளாததால் அவர் கூச்சலிட்டு வண்டியை நிறுத்தச் சொல்லி  ஓட்டுனரையும் உடனடியாக இறங்க வைத்துள்ளார்.  அவர்கள் இறங்கிய சில நொடிகளுக்குள்  கார் தீபிடித்து எரியத் தொடங்கி உள்ளது.   சில நிமிடங்களில் கார் எரிந்து சாம்பலாகி உள்ளது.

உலோக பாகங்கள் தவிர மற்றவை எல்லாம் எரிந்துள்ளன.  பதட்டத்தில் பல்லவி சிங் தன்னுடைய பை, பர்ஸ் உள்ளிட்டவைகளை காரிலேயே விட்டு விட்டதால் அவையும் எரிந்து சாம்பலாகி உள்ளது. இந்த சம்பவத்தை வீடியோவாக படம் பிடித்த பல்லவி சிங் இதை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வாகனங்களில் செல்வோருக்கு எச்சரிக்கை அளித்துள்ளார்.

அத்துடன் உபேர் நிறுவனம் நேற்று இரவு வரை இது குறித்து தம்மிடம் எதுவும் விசாரிக்காததையும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் உபேர் நிறுவனத்துக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததே தெரியுமா என தாம் எண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் உபேர் தனது வாடிக்கையாளர்கள் மீது அக்கறை செலுத்தாத போதும் தாம் உபேர் ஓட்டுனர் உயிரைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உபேர் நிறுவனம் தனது டிவிட்டரில் “பல்லவி அவர்களே, நாங்கள் இதனால் துயருற்றுள்ளோம். நீங்கள் உடனடியாக எங்கள் வாகன பாதுகாப்புத் துறையை அணுகவும்.  நாங்கள் உங்கள் பதிவில் உள்ள அவசரத்தை புரிந்துக் கொண்டுள்ளோம்.  நீங்கள் உடனடியாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் எங்களை தொடர்பு கொள்ளவும்” என பதில் அளித்துள்ளது.

உபேர் இது குறித்து நடவடிக்கைகள் குறித்து அந்நிறுவனம் எந்த தகவலும் அளிக்கவில்லை.