மும்பை

முன்னணி உணவு வழங்கும் நிறுவனமான உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை ஜொமாட்டோ நிறுவனம் விலைக்கு வாங்குகிறது.

மிகப் பழைய காலத்தில் உணவு என்றால் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது எனவும் வெளியூருக்குச் செல்லும் போதும் உணவைக் கட்டி எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருந்தது.   அதன் பிறகு உணவு விடுதிகள் செல்லும் வழக்கம் வந்தது.  தற்போது அந்த வழக்கமும் குறைந்து வருகிறது.   வீட்டில் இருந்தே உணவு விடுதிக்கு ஆன்லைன் மூலம் ஆர்டர் அளித்தால் அதை வீட்டுக்கு வழங்கும் நிறுவனங்கள் தற்போது உள்ளன.

இவற்றில் ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.   இதற்கு அடுத்த படியாக அமெரிக்க டாக்சி நிறுவனமான உபெர் நிறுவனமான உபெர் ஈட்ஸ் தனது சேவைகளைத் தொடங்கியது.  ஆயினும் உபெர் ஈட்ஸ் நிறுவனத்தால் மற்ற இரு நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியாகப் போட்டி இட முடியவில்லை.  இதையொட்டி செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இயங்கியது.

அதன் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உபெர் ஈட்ஸ் நிறுவனம் அறிவித்தது.  இதனால் சேவைகளைச் சரிவரச் செய்ய முடியாத நிலை உண்டானது.   இந்த நிறுவன முதலீட்டாளர்களும் நிறுவனம் அடைந்து வரும் நஷ்டம் குறித்து கடும்  அதிருப்தி அடைந்தனர்.   அதையொட்டி நிறுவனத்தை விற்றுவிட முடிவு செய்யப்பட்டது.    இதை வாங்க ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன.

நேற்று உபெர் ஈட்ஸ் நிறுவனம் அளித்த அறிக்கையின்படி ஜொமாட்டோ நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.   இந்தியாவில் தற்போது ஜொமட்டோ நிறுவனத்துக்கு உள்ள 9.99% வாடிக்கையாளர்கள் விவரங்கள், ஊழியர்கள், உள்ளிட்டவற்றை உபெர் நிறுவனம் ஜொமாட்டோவுக்கு மாற்ற உள்ளது.   அத்துடன் உபெர் செயலியைப் பயன்படுத்தும் மக்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு ஜொமாட்டோ செயலி மூலம் உணவுகளைப் பெறுவார்கள்.

இதன் மூலம் உபெர் நிறுவனம் தனது உணவு வழங்கும் துறையில் ஏற்பட்டு வரும் இழப்பைச் சரி செய்து விடும் எனக் கூறப்படுகிறது.   அதே வேளையில் உபெர் நிறுவனம் தனது வாடகைக்கார் சேவையைத் தொடர்ந்து இந்தியாவில் நடத்த உள்ளது எனவும் அதில் மாறுதல் ஏதும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.