உடன்குடி அனல் மின் நிலையம்: கானொளி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல்

சென்னை,

டன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். கானொளி காட்சி மூலம் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது  உடன்குடி. இங்கு அனல்மின் திட்டம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது  அனல் மின் நிலையத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய நிலையம்  ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் விழா  நடைபெற்றது.

இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர்   தங்கமணி, அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் தலைமை செயலாளர், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி, எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 46 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும்  இந்த மின் உற்பத்தி நிலையம் ரூ.8,000 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு மத்திய அரசு உதவியையும் பெற்றுள்ளது.

உடன்குடி மின் உற்பத்தித் திட்டம் முழுமையபாக  செயல்படும்போது அதன் மூலம் 1230 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தின் மின் தேவை போக மீதம் உள்ள மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில் மின்வாரியத்தை சீர்திருத்தியவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.

அதையடுத்து பேசிய, தமிழக  மின் துறை அமைச்சர் தங்கமணி, தமிழகம் தொடர்ந்து மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், மின் மிகை மாநிலமாகவும் மாறிவருவதாகக் கூறினார்.  கூடிய விரைவில் மின்சார வாரியம் லாபம் ஈட்டும் நிலைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதையடுத்து, அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி முறையில் அடிக்கல் நாட்டினார்.