காவலரே திருடன் ஆனார் : ராகுலின் முழக்கத்தை கடன் வாங்கிய உத்தவ் தாக்கரே
பந்தர்பூர்
பாஜகவை பற்றி கூறி வரும் காவலரே திருடன் ஆனார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூருவதைப் போலவே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் கூறி உள்ளார்.
பாஜக அரசின் ரஃபேல் விமான ஒப்பந்தத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் கடும் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அதை ஒட்டி அவர் நாட்டைக் காக்க வேண்டிய ஆளும் கட்சியே பாதுகாப்பு விவகாரத்தில் முறைகேடு செய்துள்ளதாகவும் அதனால் காவலரே திருடன் ஆகிவிட்டார் எனவும் கூறுவது வழக்கம்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தற்போது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பய்ணத்தில் அவர் விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும் பல பொது நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களில் கலந்துக் கொண்டு உத்தவ் தாக்கரே உரையாற்றி வருகிறார்.
அவ்வகையில் பந்தர்பூர் பகுதியில் அவர் பேசும் போது, “நான் சமீபத்தில் ஒரு விவசாயியை சந்தித்தேன். அவருடைய தோட்டத்தில் எலுமிச்சை மரத்தை பூச்சி அரித்துள்ளதாகவும் பூச்சிக் கொல்லியான எலுமிச்சை மரமே பூச்சியால் அரிக்கப்பட்டுளது குறித்து அவர் கவலை தெரிவித்தார். நான் அவரிடம் தற்போது காலம் மிகவும் மோசமாகி உள்ளதால் காவலரே திருடன் ஆகி விட்டார் என தெரிவித்தேன்” என பேசி உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில் தம்மை நாட்டின் காவலர் என கூறி கொண்டது குறிப்பிடத்தக்கது. அதனால் ராகுல் காந்தி காவலரே திருடன் ஆகி விட்டார் என கூறி வந்தார். தற்போது ராகுலின் வார்த்தைகளை சிவசேனா தலைவரும் கடன் வாங்கி உள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.