பீமா கோரேகான் கலவர வழக்குகளை திரும்பப் பெற உத்தவ் தாக்கரே முடிவு

மும்பை

டந்த ஆண்டு நிகழ்ந்த பீகா கோரேகான் கலவர வழக்குகளைத் திரும்பப் பெற உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் எல்கர் பரிஷத் என்னும் அமைப்பு மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பீமா கோரேகான் பகுதியில் ஒரு மாநாடு நடத்தியது.  இதையொட்டி அங்கு கடும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.  இந்த வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.  இதில் சமூக ஆர்வலர்களான அருண் ஃபெரைரோ, சுதா பரத்வாஜ், வெர்னான் கொன்ஸ்லாவ், வரவர ராவ் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நேற்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களான ஜயந்த் பாடில், சாகன் புஜ்புல் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ் கஜ்பியே உள்ளிட்டோர் அடங்கிய குழு சந்தித்தனர்.  அப்போது அவர்கள் பீமா கோரேகான் பகுதியில் நடந்த கலவரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்வலர்கள் மீது தவறாகக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாக கஜ்பியே விளக்கம் அளித்துள்ளார்.  இதை உத்தவ் தாக்கரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம், “கடந்த வருடம் பீமா கோரேகான் பகுதியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம்.   இந்த வன்முறை தொடர்பாகத் தீவிர குற்றங்களில் ஈடுபட்டோர் தவிர மற்றவர்கள் மேலுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி