இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே: பிற்பகலில் நம்பிக்கை வாக்கெடுப்பு

மஹாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம், தனது அரசுக்கான பெரும்பான்மையை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நிரூபிக்க உள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களை பெற்றன. பாஜக 105 எம்.எல்.ஏக்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. ஆனால் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்க பாஜக மறுத்துவிட்டதால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த வியாழக்கிழமை உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க டிசம்பர் 3 வரை ஆளுநர் அவகாசம் அளித்த நிலையில், இன்று தனது பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்க உள்ளார்.

மஹாராஷ்டிர சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது. அதில் எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமானம் செய்துவைக்க, பிற்பகல் 2 மணிக்கு மேல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆளும் சிவசேனாவுக்கு சொந்த பலமாக 56 எம்.எல்.ஏக்களும், கூட்டணி பலமாக காங்கிரஸ் தரப்பில் 44 எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் 54 எம்.எல்.ஏக்களும் என மொத்தம் 154 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருகின்றனர். பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், அதை விட கூடுதலான ஆதரவை சிவசேனா பெற்றுள்ளது. இதை தவிர சில சுயேட்சை எம்.எல்.ஏக்களும் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று தெரிகிறது.

தனிப்பெரும் கட்சியாக 105 இடங்களில் வென்ற பாஜக, எதிர்கட்சியாக அமரப்போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி