பாந்த்ரா

பாந்த்ரா மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகள் மரணம் அடைந்தது குறித்து மகாராஷ்டிர  முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் கண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ரா அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலியாகின.  இந்நிகழ்வு நாட்டையே உலுக்கியது.  ப்ச்சிளம் குழந்தைகளைப் பலி கொண்ட இந்த தீபத்தின் காரணம் இன்னும் அறியப்படவில்லை.  விபத்தில் மரணம் அடைந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியை மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

நேற்று தீ விபத்து நடந்த பாந்த்ரா மருத்துவமனையை முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்த்தார்.   இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.  மேலும் உத்தவ் தாக்கரே, “இந்த துயரத்தைக் கண்டு நான் வாயடைத்துப் போய் உள்ளேன். நான் இந்த விபத்துக்குக் காரணத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப் படுவார்கள்

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆராய மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவிர மகாராஷ்டிர தீயணைப்புத் துறை இயக்குநர் பிரபாத் பகங்டேல் இந்த ஆய்வில் பங்கேற்க உள்ளார்.  இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாராக இருப்பினும் எக்காரணத்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்த விபத்துக்குப் பொறுப்பானவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர்.  மேலும் இந்த விபத்து ஏற்பட்ட போது அந்த  பிரிவில் எந்த ஒரு மருத்துவ அதிகாரியும் இல்லாததை சுட்டிக் காட்டும் அவர்கள் மருத்துவமனையில் அவசர தேவைக்கு யாரும் இல்லாததாக நிர்வாகத்தின் மீது குறை கூறி உள்ளனர்.  மேலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் மருத்துவமனையை நேரில் பார்வையிடுவதால் எவ்வித பயனும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.