மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார்.

யாருக்கு அரியணை என்ற பிடிவாதத்தால் வலுவான கூட்டணியாக கருதப்பட்ட பாஜக, சிவசேனா கூட்டணி உடைந்தது. முதலமைச்சர் பதவிக்கு ஏற்பட்ட சண்டை கூட்டணியை முறிக்க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்தது சிவசேனா.

தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்பு, உச்சநீதிமன்ற வழக்கு என 2 வாரங்களுக்கு மேலாக நீடித்து வந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி என்று புதிய கூட்டணி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே உருவாக்கப்பட்டது.

முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் உத்தவ் தாக்கரே. அதன்பிறகு ஆட்சியமைக்க ஆளுநரிடம் அவர் உரிமை கோரினார். அதை ஏற்று ஆளுநரும் அழைப்பு விடுத்தார்.

அதை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவானது, தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில், மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், காங்கிரஸ் தலைவர் அகமது படேல், திமுக தலைவர் ஸ்டாலின்,  டிஆர் பாலு, தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.